1000 குடும்பத்தினருக்கு போர்வை வழங்குதல்
12/12/20
75 கி.மி பயணமாகி…
பொதுப் பாதை இல்லாததால் வயல் வழியே நடந்து சென்று…
குடிநீர், மின்சாரம், சாலை போன்ற அடிப்படை வசதியற்ற…
விழுப்புரம் மாவட்டத்தில் கடைக்கோடியில் உள்ள பழம்பூண்டி கிராமத்தில் வாக்காளர் அடையாள அட்டைகூட இல்லாமல் வசிக்கும்…
9 பழங்குடி இருளர் குடும்பங்களை நேரில் சந்தித்து…
போர்வே வழங்கினோம்…
உடன் வந்தவர்கள்
சொ.தாமரைச்செல்வன், ஆசிரியர் பொன்.மாரி.
அடிப்படை வசதியற்று கதவில்லாத பனைஓலைக் குடிசையில் வாழும் இதுபோன்ற நாதியற்ற 1000 குடும்பங்களுக்கு உதவ திட்டமிட்டுள்ளோம்.
அதன் அடுத்த கட்டமாக வரும் 18/12/2020 அன்று திண்டிவனத்தை அடுத்த கீழ்ச்சிவிரி கிராமத்தில் 100 குடும்பத்திற்கு போர்வை மற்றும் உணவு வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறன.
கடும் குளிரில் சாலையோரம் உள்ள ஆதரவற்றவர்களும் இதில் அடங்குவர்.
பெற்ற தாயைவிட அனந்தகோடி பங்கு கருணை கொண்ட அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே, இத்திட்டத்திற்கு உதவி செய்யுங்கள்.
தோள் கொடுப்போம் துணை நிற்போம்
13/12/20
நண்பர் முகமது இலியாஸ் மூலம் நமக்கு அறிமுகமானார் திலீப்குமார். (வயது 75) பெற்ற நான்கு பிள்ளைகளும் கைவிட்டதால் முதுமையின் காரணமாக கூன் விழுந்த தன் மனைவி கிரிஜாவுடன் (வயது 70) வறுமையில் வாழ்ந்து வருகிறார்.
ஆதரவற்ற முதியோர்களுக்கு தமிழக அரசு தரும் மாதம் ரூ:1000/- உதவித் தொகையை இருவரும் பெற்று ரூ:2000/- வீட்டு வாடகையாக தந்து விடுகிறார்கள்.
தையல் தொழில் நன்கு தெரிந்த திலீப்குமாருக்கு கண்பார்வை குறைந்ததால், சில ஆண்டுகளாக ஊதுவத்தி தயாரித்து வணிகம் செய்துவந்தார். கடந்த 6 மாத காலமாக கடுமையான மூச்சுத்தினறல் நோயால் துன்பப்பட்டு வருகிறார். இதனால் தொழில் செய்ய வாய்ப்பின்றி வறுமையான சூழலுக்கு குடும்பம் தள்ளப்பட்டுள்ளது.
மருந்தகம் (மெடிக்கல்) வைத்திருக்கும் நண்பர் முகமது இலியாசின் உதவியால் மாதந்தோறும் மருந்து மாத்திரைகளை இலவசமாக பெற்றுக் கொள்கிறார் திலீப்குமார்.
ரேஷன் கடையில் வழங்கும் 3 லிட்டர் மண்ணெண்ணெயைக் கொண்டு ஸ்டவ் அடுப்பில் சமையல் செய்கிறார் மூதாட்டி கிரிஜா.
இவர்களின் வறுமைச் சூழலை கருத்தில் கொண்டு மாதம் தோறும் அரிசி, மளிகை, காய்கனி என ரூ:2000- த்திற்கான பொருட்களை நமது அறக்கட்டளை சார்பில் இனி வழங்கப்படும்.
அந்த வகையில் தோள் கொடுப்போம் துணை நிற்போம் திட்டத்தின் மூன்றாவது பயனாளிகளாக திலீப்குமார் குடும்பம் இணைகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம், பெரியகூத்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தயவுத்திரு கோவிந்தன்- தயவுத்திருமதி சத்யா தம்பதியரின் தவப்புதல்வி செல்வி தீபிகா அவர்களின் பிறந்தநாள் மகிழ்வாக இன்று (14/12/2020) பசியாற்றுவித்தல் இனிதே நடந்தது
கிருஷ்ணகிரி மாவட்டம், பெரியகூத்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தயவுத்திரு கோவிந்தன்- தயவுத்திருமதி சத்யா தம்பதியரின் தவப்புதல்வி செல்வி தீபிகா அவர்களின் பிறந்தநாள் மகிழ்வாக இன்று (14/12/2020) பசியாற்றுவித்தல் இனிதே நடந்தது*
திருஅருட்பா ஆ.பாலகிருஷ்ண பிள்ளை நினைவு அறக்கட்டளை நடத்தும் வள்ளலார் உபகாரச் சாலையின் ஜீவகாருண்யப் பணியானது, விழுப்புரம் நகரில் உள்ள எவ்வித ஆதாரமும் இல்லாத ஏழைகள், மாற்றுத் திறனாளிகள், மனநோயாளிகளின் இருப்பிடத்திற்கே நேரில் சென்று அவர்களின் பசிப்பிணியைப் போக்கும் நடமாடும் தருமச்சாலையாகும்.
மேலும் உபகாரச் சாலைக்கு பசிப்பிணியுடன் நாடி வரும் ஏழை, எளிய மக்களுக்கு நாள்தோறும் காலையில் வள்ளலார் மூலிகைக் கஞ்சி வழங்கப்படுகிறது.
நாள்தோறும் நண்பகல் வாழை இலையில் அறுசுவை அமுதும் வழங்கப்படுகிறது.
இந்த உயிர் நேயச் செயல்பாடு தடைபடாமல் நடைபெற நாள்தோறும் ஒரு குடும்பம் பசிப்பிணி போக்கிட முன்வர வேண்டும் என்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் வேண்டுகிறோம்.
காக்கை, குருவி எங்கள் சாதி
கடந்த 20/09/2020 அன்று விழுப்புரம் வள்ளலார் உபகாரச் சாலையில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்தது.
ஒரு குருவியின் இடதுபக்க காலில் நூல் சுற்றிக் கொண்டு இருந்ததால் அதனால் பறக்க முடியாமல் தவித்தது.
உபகாரச் சாலைக்கு நண்பகல் சாப்பிட வந்த காயத்ரி, தேவிகா, சாருமதி என்கிற மூன்று சிறுமிகளும் குருவியின் காலில் சிக்கிக் கொண்டிருந்த நூல்களைப் பிரித்து எடுத்தார்கள்.
குருவியின் இடதுபக்க கால் சற்று உடைந்து ரத்தம் கசிந்த நிலையில் உறைந்து காணப்பட்டது.
குருவியால் பறக்க முடியாததற்கு அதுதான் காரணம்.
எப்படியாவது குருவியை பறக்க வைத்து விடவேண்டும் என்று மூன்று சிறுமிகளும் அழாத குறையாக என்னிடம் கெஞ்சினார்கள்.
என் மனைவி மங்கையர்க்கரசியின் ஆலோசனைப்படி குருவியின் அடிபட்ட காலுக்கு மஞ்சள் பூசி முதலுதவியும் செய்தார்கள் சிருமிகள். ஆனாலும் குருவியால் பறக்க முடியவில்லை.
“நீங்கள் பறக்க வையுங்கள் அண்ணா” என்று குருவியை என்னிடம் சிறுமிகள் தந்தனர்.
குருவியைக் கையில் ஏந்தினேன். குருதியின் உடலில் அதிக வெப்பம் காணப்பட்டது உடல் நடுங்கியபடி இருந்தது எப்படியாவது மனிதக் கூட்டத்திடமிருந்து தப்பித்துவிட வேண்டும் என்ற தவிப்பு குருவியிடம் இருந்ததைக் காண முடிந்தது.
குருவியின் முதுகை மென்மையாகத் தடவிக் கொடுத்தேன். குழந்தைகளின் கவலையும் குருவியின் பயமும் போக்கப்பட வேண்டும், “குருவியை பறக்கச் செய்யுங்கள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே” என்று மூன்று முறை மகா மந்திரம் சொல்லி குருவியை பறக்க விட்டேன்.
குருவி நீண்ட தூரம் பறந்து சென்று ஒரு மின் கம்பியில் உட்கார்ந்தது. பிறகு அங்கிருந்தும் வெகு தூரம் பறந்து சென்று எங்கள் கண்களிலிருந்து மறைந்து போனது.
உபகாரச் சாலை திறந்த சில நாட்களில் இதே சிறுமிகளும் சில சிறுவர்களும் என்னிடம் வந்து “கறி சோறு போட்டால் இன்னும் கூட்டம் வரும்” என்றார்கள். அப்படிப்பட்டவர்களிடம் ஒவ்வொரு நாளும் கொல்லாமை குறித்துப் பேசியதின் விளைவு குருவியின் மீது சிறுமிகளுக்கு இந்த அளவிற்கு கரிசனம் ஏற்பட்டுள்ளது.
உபகாரச் சாலைக்கு வருகைதரும் சிறுவர்களும் பெரியவர்களும் அசைவம் சாப்பிடுவதை விட்டுவிட வில்லை. ஆனாலும் அது பாவச் செயல் என்பதை உணரத் தொடங்கியுள்ளார்கள். அதனால்தான் குருவியின் விடுதலை சாத்தியமாகியுள்ளது.
குறிப்பு: சிறுமிகள் மூவருக்கும் 1008 முறை எழுதக்கூடிய மகாமந்திர நோட்டு பரிசளித்தோம்.
———————————————————————————————————–
ராமாயி என்றொறு பாட்டியின் கதை
கடந்த வாரம் சூரியன் சுட்டெரிக்கும் பகல் 11:00 மணியளவில் இந்த பாட்டி உபகாரச் சாலைக்கு வந்தார்.
“பொடவைக்கி டோக்கன் கொடுக்கிறீர்களாமே எனக்கு ஒன்னு குடுங்க” என்றார்.
“டோக்கன் எல்லாம் இரண்டு நாட்களுக்கு முன்பே கொடுத்து முடித்தாயிற்று, மதியம் ஒரு மணிக்கு சாப்பாடு போடுவோம் சாப்பிட்டு போங்க அதுவரைக்கும் மரத்தடி நிழலில் உட்காருங்கள். மறுபடியும் புடவை கொடுக்கும் போது உங்களுக்கும் தருகிறோம்” என்றேன்.
நண்பகல் உணவு சாப்பிட்டு மீண்டும் மரத்தடியில் சென்று உட்கார்ந்து கொண்டார் பாட்டி. சாப்பிட வந்தவர்கள் அனைவரும் சென்று விட்டார்கள்.
தனிமையில் இருக்கும் பாட்டியிடம் சென்று “ஏன் இன்னும் வீட்டுக்குப் போகவில்லை” என்றேன்.
“எனக்கு ஒரு பொடவை குடுத்தா இன்னா” என்றார்.
பாட்டியின் பிடிவாத குணத்தை கண்டு எனக்குள் கோபம் எழுந்தது.
“50 பேருக்கு மட்டும் உடைகள் கொடுப்பதாக முடிவு எடுத்து டோக்கன் கொடுத்துவிட்டோம். இனிமேல் வாய்ப்பு கிடைக்கும்போது கொடுக்கிறோம் கிளம்புங்கள்” என்றேன்.
ஏமாற்றம், விரக்தி, கோபம் கலந்த பார்வையை என் மீது வீசிவிட்டு கூன் விழுந்த உடலோடு பாட்டி நடக்கத் தொடங்கினார்.
பாட்டியை அப்போதுதான் கவனித்தேன் அவரது பின் பக்கத்துணியின் பெரும்பகுதி கிழுந்திருந்தது.
“பெரும் பாவத்திற்கு ஆளாகிறோமோ” என்ற பயம் எனக்குள் எழுந்தது.
பாட்டியை அழைத்தேன்.
திரும்பிப் பார்த்தார்.
உங்க பேர் என்ன?
ராமாயி…
“சரி, திங்கள் கிழமை வாங்க, உங்களுக்கும் புடவை தருகிறோம். தினந்தோறும் சாப்பிடவும் வாங்க” என்று அனுப்பி வைத்தேன்.
வள்ளலாரின் பிறந்த நாளான கடந்த 05/10/2020 பகல் 12 மணிக்கு வேட்டி சேலை வழங்கும் நிகழ்வுக்கு, ராமாயி பாட்டி காலை 9 மணிக்கே வந்து முதல் ஆளாக இடம் பிடித்தார்.
நிகழ்ச்சியின் போது முதல்நபராக ராமாயி பாட்டியை அழைத்து சேலையை கொடுத்தோம். பாட்டியின் மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை.
ஆனாலும் பழைய புடவையுடன் பாட்டி நேற்று (06/10/2020) என்று உபகாரச் சாலைக்கு சாப்பிட வந்தார்.
“புதுப்புடவை என்னாயிற்று” என்று கேட்டேன்.
பாட்டியிடம் இருந்து பதில் இல்லை.
பாட்டியின் பக்கத்தில் சென்று அமர்ந்தேன்.
பாட்டியின் கண்களில் நீர் கசிந்தது.
‘என்ன நடந்தது’ என்றேன்.
‘எதுவும் நடக்கல, புடவைய தீபாவளிக்கு கட்டிக்கலாம்னு இருக்கேன். எங்க வீட்டுக்காரர் பேரு முத்து. சர்க்கார் தோட்டி வேலை. ஊர்ல யாராவது செத்துப்போனா வெளியூர்ல இருக்குற அவுங்க சாதி சனத்துக்கு போய் சேதி சொல்லிட்டு வரணும். சர்க்கார் உத்தரவை இன்னது இன்னது என்று தமுக்கடித்து சொல்லணும். கோயிலு திருவிழாவுக்கு ஊர் சனத்துக்கு சொல்லனும். அவர் செத்து ரெண்டு வருஷம் ஆயிடுச்சு. எத்தனை பொங்கல் எத்தனை தீபாவளி வந்து போச்சு ஒரு நல்ல துணி கிடையாது. எடுத்து குடுக்க நாதியில்ல” என்றார்.
பிள்ளைகள் இல்லையா?
“இருக்காங்க அவங்க வேலைய அவங்க பாக்குறாங்க”.
சாப்பாடு?
“வூட்டுக்கு வந்தவ கொடுக்கறா”.
வேற புடவை இல்லையா?
“இருக்குது ஒன்னும் பாதியா”.
‘சாப்பிட தினமும் வாங்க’ என்றேன்.
சோத்துக்காக மட்டுமே வரல, டோக்கன் இல்லாட்டியும் மொத ஆளா கூட்டு எனக்கு துணி கொடுத்த பாத்தியா, ஒனக்காக நான் வருவேன். வள்ளலாரு ஆத்தா என்ன கை உடல, நடந்தால் மூச்சு வாங்குது இப்பகூட அஞ்சு இடத்தில உட்கார்ந்து உட்கார்ந்து தான் வந்தேன்” என்றார். (வள்ளலாரை பெண் தெய்வமாக நினைத்துள்ளார் பாட்டி)
வரும் 26/10/2020 அன்று மீண்டும் ஒரு புடவையை ராமாயி பாட்டிக்கு கொடுக்க திட்டமிட்டுள்ளோம்.