உலக மக்கள் அனைவரும் ஆன்மநேய ஒருமைப்பாட்டுடன் வாழ வழி சொன்ன வள்ளலாரின் கருத்துக்கள் மீது மிகுந்த பற்று கொண்டு சுத்த சன்மார்க்க நெறியை முடிந்தளவு பின்பற்றியும் அதே அளவு மக்களிடம் பரப்பி வருகிறோம்.
அதற்கான ஒரு கூட்டு ஆதரவு தேவை கருதியே திருஅருட்பா ஆ.பாலகிருஷ்ண பிள்ளை நினைவு அறக்கட்டளையை கடந்த 19/10/2017 அன்று விழுப்புரத்தில் பதிவு செய்தோம்.
2018 ஜனவரி மாதம் தொடங்கி 2020 மார்ச் மாதம் வரை 27 மாதாந்திர சன்மார்க்க ஆய்வரங்கங்களையும், சொற்பொழிவுகளையும் விழுப்புரத்தில் நடத்தினோம். அதில் சன்மார்க்க ஆய்வாளர்களையும், அறிஞர் பெருமக்களையும் பங்குபெற வைத்தோம்.
சர்வதேச மனித உரிமை நாளான டிசம்பர்-10, 2018 அன்று முதல் விழுப்புரம் நகரத்தில் உள்ள ஆதரவற்ற ஏழைகள், முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள், மற்றும் மனநோயாளிகள் ஆகியோரின் இருப்பிடத்திற்கே நேரில் சென்று நண்பகல் ஒருவேளை மட்டும் பசிப்பிணி போக்கி வருகிறோம்.
தற்போது உபகாரச் சாலைக்கென தற்காலிக குடில் அமைத்துள்ளதால் அங்கேயே சமைத்து கடந்த 17/08/2020 முதல் நண்பகல் 70 பேருக்கும், இரவு 30 பேருக்கும் என நடமாடும் தருமச்சாலையின் மூலம் 100 பேருக்கும், உபகாரச் சாலையில் நண்பகல் சுமார் 100 பேருக்கும் என நாள்தோறும் 200 பேருக்கு பசிப்பிணி போக்கி வருகிறோம்.
கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற நிலையில் சாலையோரத்தில் படுத்துறங்கும் ஏழைகளுக்கு கடந்த 2018, 2019 ஆகிய இரு ஆண்டுகளில் டிசம்பர் மாதத்தில் ஆண்டொன்றுக்கு சுமார் 250 பேருக்கு தரமான போர்வை வழங்கியுள்ளோம்.
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இவர்களுக்கு உடைகளும் வழங்கி வந்தோம். உபகாரச் சாலைக்கென தற்காலிக குடில் ஏற்படுத்திய பிறகு கடந்த 31/08/2020 அன்று ஆதரவற்ற ஏழைகள் 100 பேருக்கு இலவச வேட்டி-சேலை வழங்கினோம்.
கொரோனாவினால் முழு ஊரடங்கு நடைமுறையில் இருந்த காலங்களில் ஆதரவற்ற பலருக்கும் மருத்துவ உதவிகளும், சொந்த ஊருக்கு செல்ல பண உதவிகளும் ஏற்பாடு செய்து தந்தோம்.
உலக மொழிகளுக்கெல்லாம் தந்தை மொழியாக விளங்கும் தமிழ்மொழியை வளர்க்கும் நோக்கத்தில் தமிழ் வழியில் படித்து தமிழில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு உதவித் தொகையும், ஏழ்மை நிலையிலும் தாய்-தந்தை இழந்த நிலையிலும் கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவித் தொகையும் கடந்த இரண்டு ஆண்டுகளாக வழங்கி வருகிறோம்.
மதுவினாளும் அசைவ உணவினாலும் ஏற்படும் தீமைகள், பாவங்கள் குறித்து மக்களிடம் அவ்வப்போது தொடர்ந்து பரப்புரை செய்து வருகிறோம்.
வள்ளலார் வகுத்த நெறிகளை பரப்புவதில் தம்மை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டு உழைக்கும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், அறிஞர்களுக்கு ஆண்டுதோறும் ஆ.பாலகிருஷ்ண பிள்ளை நினைவு விருதும் ரூபாய் 10 ஆயிரம் பண முடிப்பும் வழங்கி வருகிறோம்.
சென்னை-ஏழுகிணறு பகுதியில் வீராசாமி தெருவில் உள்ள வள்ளலார் வாழ்ந்த வீட்டை அரசுடமையாக்கக் கோரி பல அரசியல் கட்சித் தலைவர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்துக்கும் கொண்டு சென்று வருகிறோம். இதற்காக தமிழக முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அஞ்சலட்டை இயக்கத்தை தொடங்கி இதுவரை 10 ஆயிரம் கடிதங்கள் தமிழக முதல் அமைச்சருக்கு அனுப்பியுள்ளோம்.
இதேபோல தைப்பூச நாளில் தமிழக அளவிலான பொது விடுமுறையை அறிவிக்க கோரி, தமிழக அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம்.
தற்போது விழுப்புரத்தில் அமைய உள்ள பல்கலைக் கழகத்திற்கு வள்ளலாரின் பெயரைச் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து அதற்காக அரசியல் ஆதரவைத் திரட்டும் முயற்சியிலும் இறங்கியுள்ளோம்.
மேற்கண்ட புண்ணியச் செயற்பாடுகள் அனைத்தும் உலகம் முழுவதும் வாழும் சன்மார்க்க அன்பர்களின் ஒத்துழைப்பினாலும் கருணை உதவியினாலுமே சாத்தியமாயிற்று என நன்றியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
மேற்கண்ட செயல்பாடுகளை விரிவாக்கம் செய்யவும் இன்னும் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் குருவருளையும் திருவருளையும் வேண்டி நிற்கிறோம்.